இன்றைக்கு சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு பள்ளியில் ஏற்படும் மன அழுத்தம் ஒருவகை என்றால், பெரியவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தம் இன்னொரு வகை.

வீட்டில் உள்ளவர்களுக்கும் சில சமயங்களில் பேசுவதற்கு யாருமற்ற நிலையில் ஏற்படும் தனிமை பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

அத்துடன் சமூகத்தின் நிர்பந்தங்கள் தனி மனித மன அழுத்தத்தை மேலும் அதிகப்படுத்துகின்றன.

இவ்வாறு மன அழுத்தம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாததாகி விட்ட நிலையில், அதனைக் குறைக்கும் வழிகளை நாடுவதே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.

மனதிற்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடுவதே மன அழுத்தத்தை குறைக்க உதவும், அதே போல மன அழுத்தம் குறைய ஒரு சில சிறப்பு உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

மாதுளம் பழரசம்
மாதுளையில் இருக்கும் இயற்கை நிறமான அடர்சிவப்பு மனதை லேசாக்குகிறது, இதில் உல்ல யுரொதலின் ஏ எனும் சத்து நம் உடலின் செல் சுத்திகரிப்பு மையத்தை புத்துணர்வோடு வைத்திருக்கிறது.

அதிலும் சர்க்கரை ஐஸ்கட்டிகள் போன்றவற்றை விடுத்து நேரடியான மாதுளை ரசம் அருந்துவதே மன அழுத்தத்திற்கு நல்லது.

வாழைப்பழம்
மூளையில் சுரக்கும் செரோட்டனின் சுரப்பியை சமநிலையில் வைக்க வாழைப்பழம் உதவுகிறது. செரோடினின் சீரற்ற முறையில் இருப்பதால் பலவித உளவியல் பாதிப்புகள் ஏற்படுகிறது.

அதனை சீராக்குவதில் வாழைப்பழம் பெரும்பங்கு வகிக்கிறது. ஆகவே எப்போதும் உம்மென்று இருப்பவர்களுக்கு அடிக்கடி வாழைப்பழம் உண்ணக் கொடுக்கலாம். அதன் மூலம் அவர்கள் சமநிலையோடு இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம்.

அமுக்கிரா கிழங்கு பொடி
சித்த வைத்தியத்தில் சிறப்பான இடம் இந்த அமுக்கிரா கிழங்கு பொடிக்கு உண்டு. நரம்பு தளர்ச்சி நோய்க்கு ஏற்றது தாம்பத்தியத்திற்கு உதவுவது போன்ற சிறப்புகள் அமுக்கிரா கிழங்கிற்கு உண்டு என்றாலும் மன அழுத்தம் போக்குவதற்கும் பெரும் துணை புரிகிறது.

தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில் அரை ஸ்பூன் அமுக்கிரா கிழங்கு பொடி போட்டு அருந்தி வர மன அழுத்தத்தால் ஏற்படும் தூக்கமின்மை குறைபாடுகள் நீங்கி எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் நிம்மதியாக உறக்கம் வரும்.

ஜாதிக்காய் பொடி
பாலில் ஜாதிக்காய் பொடியை ஒரு சிட்டிகை சேர்த்து அருந்தி விட்டு, உறங்க சென்றால் அதீத கனவுகள் பதட்டங்கள் நிறைந்த தூக்கம் இல்லாமல், அமைதியான உறக்கமும் தெளிவான கனவுகளும் ஏற்படும்.

மண்பானை நீர்
அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி மண்பாண்ட தண்ணீர் அருந்துவது நலம் பயக்கும். மேலும் அந்த நீரில் வெட்டி வேர் போட்டு குடிப்பது அல்லது சீரகம் போட்டு வைத்து குடிப்பது மனம் சிறப்பாக செயல்பட உதவி செய்யும்.

தினசரி இரண்டு முறை குளியல்
மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் சில சமயம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஷவரில் சற்று நேரம் நின்று விட்டு வந்தால் சற்று மன பாரம் குறைந்து லேசாகி விடும். சில சினிமா காட்சிகளில் கூட இது போல காட்டுவதுண்டு. அது உண்மைதான் என்கிறது அறிவியல்.

அதிலும் ஒருசில தைலங்களை இந்தக் குளியலில் இணைத்துக் கொள்வதன் மூலம் மன அழுத்தம் என்பது வெகு சீக்கிரம் காணாமல் போய்விடும்.

லாவண்டர் தைலம் , டி ட்ரீ தைலம் ரோஸ்மேரி தைலம் போன்றவைகள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

இவைகளை குளியலில் சிறிது சொட்டுகள் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல பலன், நாள் முழுதும் சுறுசுறுப்பு, மகிழ்வான மனநிலை போன்றவற்றை பெறலாம்.

உணவு முறை
மன அழுத்தம் நீங்க உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும் செயற்கை நிறமூட்டப்பட்ட உணவுகள் கவன சிதைவு நோய்களை உண்டாக்கும்.

எண்ணையில் பொறித்த உணவுகளை குறைத்து ஆவியில் வேக வைத்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மனம் சமநிலையோடு இருக்க உதவி செய்யலாம்.